Monday, March 16, 2015

பெற்றோர்களின் மதிப்பறிந்து அவர்களைப் போற்றுவோம்

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை 
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று! 🍒
************************
இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில் அடங்கியுள்ளது.. 
இன்று நாம் செய்வது தான் நாளை நமக்கும். 
பெற்றோர்களின் மதிப்பறிந்து அவர்களைப் போற்றுவோம். 🍒





Love never should get fail due circumstances guys.....

No comments:

Post a Comment