Saturday, March 21, 2015

தமிழ்நாடு அரசு கேபிள் பொது இ- சேவை


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகத்தில் உள்ள 254 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வாகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 09.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை செயல்படும். பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.

பொது இ-சேவை மையங்களில்,

* கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்

    * வருமானச் சான்றிதழ் 

 * சாதிச் சான்றிதழ்

    * இருப்பிடச் சான்றிதழ்

    * முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்

ஆகிய வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும்  சான்றிதழ்களைப் பெறலாம். 


மேலும், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான பல்வேறு திருமண உதவித்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

இம்மையங்களில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தையும் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணை காண்பித்து ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்,  அல்லது இம்மையத்தில் உள்ள இயந்திரத்தில் தங்களது கைரேகையை பதிவு செய்து கொண்டு ஆதார் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லது விண்ணப்பம் செய்தபோது தங்களின் கைபேசி எண்ணை பதிவு செய்திருந்தால் அதை தெரிவித்து, ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளும் வசதி இப்பொது இ-சேவை மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கும், ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கும், பான்கார்டு ( PAN card) பெறுவதற்கும்,  ஓய்வூதியத் திட்டங்களில் சேர்வதற்கும் அனைத்து  வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டுள்ள பொது இ-சேவை மையங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அவர்கள் கோரியுள்ள சான்றிதழ் தயார் ஆனதும்,  விண்ணப்பத்தாரரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படுகிறது.

பல்வேறு முக்கிய அரசுச் சான்றிதழ்கள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதால் பொது மக்களுக்கு அலைச்சலும் கிடையாது, செலவீனமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று அரசின் சேவைகளைப் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
---
ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,
மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

No comments:

Post a Comment